ஒரு சமூகத்தின் மீது வன்மத்தை விதைக்கும் வகையில், உண்மையை மறைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.
ஜெய்பீம் என்ற திரைப்படத்தை உண்மை கதை என்று சொல்லி விளம்பரப்படுத்திய படக்குழு, பின்னர் அது புனையப்பட்ட கதை என்று பின்வாங்கியது. இதற்கு காரணம் திரைப்படத்தில் வேண்டுமென்றே தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய வன்னிய இன மக்களை எதிரியாக சித்தரித்து, படத்தில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
படத்தின் மையக் கருவில் அமைக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரம் உண்மையில் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, அவரை வன்னியர் என்று பல இடங்களில் குறியீடுகளை முன்வைத்தும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் பெயரை வைத்து, தமிழகத்தில் ஒரு பதட்டமான ஒரு சூழ்நிலையை படக்குழு உருவாக்கியது.
மேலும், படக்குழு தாங்கள் செய்தது சரிதான் என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டுமானால் மகாத்மா காந்தியின் கொலை சம்பவத்தை படமாக எடுத்து இருக்கிறோம் என்று விளம்பரப்படுத்தி விட்டு., மகாத்மா காந்தியின் பெயரை மகாத்மா காந்தி என்று வைத்துவிட்டு, கொலை செய்தவர் பெயரை கோட்சேவுக்கு பதிலாக அகமது, அந்தோணிசாமி, சிவகுமார் என்று வைத்தால் என்ன நடக்குமோ? அது தான் நடந்து கொண்டு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அண்மையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் அளித்து இருந்தார்.
அதன்பேரில், ஜெய் பீம் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மீது வேளச்சேரி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்திற்கு ராயல்டி தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் ராஜகண்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் புகார் அளித்துள்ளார்.