நபிகள் நாயகம் தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசிய கருத்தின் சர்ச்சையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில், நுபுர் ஷர்மாவை கைதுசெய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில், உத்தரப்பிரதேச போராட்டமானது கலவரமாக வெடித்தது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “ஒவ்வொருவரும் அவர்கள் கருத்தை முன்வைக்க ஜனநாயகத்தில் வாய்ப்பு தரவேண்டும்” எனப் பேசியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அனுராக் தாகூர், “வன்முறைக்கு இந்த ஜனநாயகத்தில் இடமில்லை. ஒவ்வொருவரும் அவர்களின் கருத்தை முன்வைக்க ஜனநாயகத்தில் வாய்ப்பு தரவேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்போது, கல்வீச்சு, தீவைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள தலைவர்களோ அல்லது அமைப்புகளோ எதுவும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது” எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், “சட்டம் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பாடம். அவற்றைப் பராமரிக்க வேண்டுமெனில் கலவரக்காரர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.