புதுடெல்லி: சர்ச்சை கருத்து தொடர்பாக நடைபெறும் போராட்டங்களின் போது போலீஸார் கவச உடையில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளிக் கிழமை தொழுகையை முடித்த பின்பு போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராஞ்சியில் போராட்டகாரர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தடியடியும் நடத்தினர். போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 10 போலீஸார் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக ராஞ்சி காவல் ஆணையர் அன்சுமான் குமார் உறுதி செய்துள்ளார்.
இதனால் ராஞ்சியில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் உள்ளது. மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தை கடைபிடித்து அமைதி காக்கும்படி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா, ஹவுரா ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தப் பட்டதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இணைய சேவையை தற்காலிகமாக முடக்கியது.
இதேபோல் உத்தரப்பிரதேசம், டெல்லி, காஷ்மீர், கர்நாடகா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்முவில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 4 பேருக்கு மேல் வெளியே செல்ல கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நடந்த போராட்டங்களில் போலீஸார் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. போராட்டங்களில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸார் முழு கவச உடையில் செல்லும்படி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் டையூவில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா முதல்வர்கள், தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு அமித்ஷா தலைமை தாங்கினார். கரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டம் நேற்று நடந்தது.