ஒடிசாவில் மூதாட்டியை தாக்கிக் கொன்ற காட்டு யானை ஒன்று, ஆத்திரம் அடங்காமல் அவரது இறுதிச் சடங்கிலும் வந்து செய்த செயல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்பால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயா முர்மு (70). இவரது இரண்டு மகள்களும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், மாயா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் மாயா நீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆண் காட்டு யானை ஒன்று, மாயா முர்முவை பயங்கரமாக தாக்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி மாயாவை, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது இறுதிச் சடங்கு அன்றைய தினம் மாலையே நடைபெற்றது. உற்றார் – உறவினர்கள், கிராம மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் அதே யானை கடுங்கோபத்துடன் பிளிறிக் கொண்டு வந்தது. இதனைக் கண்ட மக்கள், அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனைத் தொடர்ந்து, மாயா முர்முவின் சடலத்தை, எரியூட்டும் இடத்தில் இருந்து எடுத்து கீழே வீசிய யானை, தந்தத்தால் உடலை குத்தி கிழித்தது. மேலும் ஆத்திரம் அடங்காமல், அவரது உடலை அங்குமிங்கும் தூக்கி வீசியது. பிறகு அந்த இடத்திலேயே உலாவிய யானை, சிறிது நேரத்தில் வனப்பகுதிக்கு அமைதியாக சென்றது. இதன் தொடர்ச்சியாக, மாயாவின் உடல் எரியூட்டப்பட்டது.
மூதாட்டியை யானை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது உடலையும் தேடி வந்து சிதைத்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM