இஸ்லாமிய அரசுகள் பற்றி மட்டுமே அதிகம் எழுதியுள்ள வரலாற்று ஆசிரியர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்களை பற்றி எழுதாதது ஏன்? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற, எழுத்தாளர் ஓமேந்திர ரத்னுவின் ”தர்மத்திற்கான ஆயிரம் வருடப் போர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, இன்று நாம் உண்மை என்று நம்பும் பல வரலாற்றுகளின் பின்னால் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும் என்றார். அதனை வரலாற்று ஆசிரிரியர்கள் தான் மீட்டு எடுக்க வேண்டும் என கூறினார். தற்போது நாம் படிக்கும் வரலாற்றை எழுதிய வரலாற்று எழுத்தாளர்கள் இஸ்லாமிய மன்னர்களை பற்றி மட்டுமே எழுதியுள்ளனர்.
குறிப்பாக முகலாய பேரரசுகள் பற்றி மட்டுமே எழுதியுள்ளனர். ஏன் 800 ஆண்டுகாள் ஆட்சி செய்த பாண்டிய பேரரசு பற்றியோ, 650 ஆண்டுகள் ஆட்சி செய்த அஹோம் பேரரசு பற்றியோ, 600 ஆண்டுகள் ஆட்சி செய்த பல்லவ மற்றும் சோழ பேரரசு பற்றியோ, 400 ஆண்டுகள் ஆட்சி செய்த குப்தர்கள் பற்றியோ ஏன் எழுதவில்லை என கேள்வி எழுப்பினார். மௌரியர்கள் முழு நாட்டையும் – ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை – 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்றும், சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்றும் குறிப்பிட்ட அமித் ஷா அவர்களை பற்றியெல்லாம் ஏன் வரலாற்று ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.
வரலாறுகள் வெளிவரும்போது மறைக்கப்பட்டவை வெளிவந்துவிடும் என்றார். மேலும் நாம் வாழ்வது சுதந்திர நாடு எனவும் உண்மையை எழுத யாருக்கும் தடை இல்லை. யாரும் நம்மை தடுக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அதனால் வரலாற்றாசிரியர்கள் மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஒரு போரில் வெற்றியோ தோல்வியோ வரலாற்றின் அடிப்படை அல்ல, ஆனால் அத்தகைய சம்பவத்தின் விளைவுதான் அந்த வரலாற்றை உருவாக்கியது என்றார்.