எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக் காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதையடுத்து டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் குல தெய்வத்தை வழிபட்டு பொன்னேர் பூட்டி வயல்களை உழுது குறுவை சாகுபடி பணியை தொடங்கினர்.
டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லணையிலிருந்து மே 27-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது டெல்டா மாவட்டமான தஞ்சையில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில், பூதலூரை அடுத்துள்ள செல்லப்பன்பேட்டையில் விவசாயிகள் தங்களது குல தெய்வத்தை வழிபட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் அவரவர் வயல்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அதன் பின்னர், ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும், கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
முன்னதாக, ஏர் கலப்பை, மண் வெட்டி உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்து குல தெய்வத்தை வழிபட்டு தங்களது வயல்களில் எருதுகளை ஏர் கலப்பையில் பூட்டி வயல்களை உழுது சாகுபடி பணிகளை தொடங்கினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“