முகமது நபிகளை அவதூறாகப் பேசியதை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அம்மாநில போலீசார் மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்றை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினர். டெல்லி ஜமா மஸ்ஜித், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், லூதியானாவின் ஜமா மஸ்ஜித், கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ், பிரயாக்ராஜின் அடல் பகுதியில் நூபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அட்டாலா பகுதியில் நடந்த மோதலின்போது கற்கள் வீசப்பட்டன.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அம்மாநில போலீசார் மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “இதுபோன்ற லாக்-அப் தாக்குதல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். போலீஸ் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உ.பி., மனித உரிமை மீறல்களில் முதலிடத்தில் இருப்பதாகவும், பட்டியலினத்தவர்கள் ஒடுக்கப்படுவதில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
उठने चाहिए ऐसी हवालात पर सवालात
नहीं तो इंसाफ़ खो देगा अपना इक़बाल
– यूपी हिरासत में मौतों के मामले में न. 1
– यूपी मानवाधिकार हनन में अव्वल
– यूपी दलित उत्पीड़न में सबसे आगे pic.twitter.com/BCGn93LO49
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 11, 2022
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் முதலில் வெளியானது. சஹாரன்பூர் கோட்வாலி மாவட்டத்தில் கலவரம் மற்றும் கல் வீச்சு என குற்றம்சாட்டப்பட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. ட்வீட் வைரலான பிறகு, சஹாரன்பூர் எஸ்எஸ்பி ஆகாஷ் தோமர், அந்த வீடியோ மாவட்டத்தைச் சேர்ந்தது அல்ல என்று கூறினார். “நான் இன்னும் வீடியோவைப் பார்க்கவில்லை, ஆனால் அது சஹரன்பூரிலிருந்து இல்லை. அது எங்கிருந்து வருகிறது அல்லது என்ன சூழல் என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து விசாரித்து, போலீசார் யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM