திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சி நடந்துள்ளது. மேலும் கடந்த வாரம் சனிக்கிழமையும் 3 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 5 மாதங்களில் மட்டும் 24 கொலைகள் நடந்துள்ளதால் திண்டுக்கல் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரும்பாறையைச் சேர்ந்தவர் மாரிமுத்து(34). இவர் மீது பழநி டவுன், தாலுகா உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரின் கண்காணிப்பில் உள்ள மாரிமுத்து, வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியில் உள்ள தாய்மாமா செல்லத்துரை வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 37 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சித்தூர் மந்தை குளத்தில் மது அருந்தியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை சென்று நின்றது.
கண்மாயில் மாரிமுத்து மது அருந்தியதை உறுதி செய்த போலீஸார், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் விசாரித்தனர். இதற்கிடையே வடமதுரை சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், மாரிமுத்துவின் பெரியம்மா மகனான அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில், குடித்துவிட்டு வீட்டில் பிரச்னை செய்ததால் ஆத்திரமடைந்த முனியாண்டி மது அருந்த அழைத்துச் சென்று தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்தது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர்.
மகனைக் கொன்ற தந்தை!
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(57). கூலித்தொழிலாளியான இவருக்கு 33 வயதான மனப் பிறழ்வு ஏற்பட்ட மகன் உள்ளார். பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனநல பாதிப்புக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இருப்பினும் மனநலம் பாதித்த மகனின் தொந்தரவு அதிமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை குணாவின் தொந்தரவு அதிகமாக இருந்துள்ளது. சகித்து கொள்ளமுடியாமல் மனமுடைந்த மோகன்ராஜ், மகனை கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதையடுத்து மோகன்ராஜ், சின்னாளபட்டி போலீஸாரிடம் சரணடைந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைதுசெய்தனர்.
அக்காவைக் கழுத்தறுத்த தம்பி!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நரிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(24) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் செல்வநாயகிக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக அவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காங்கேயம் சென்று வந்தனர்.
நேற்று அதிகாலை வழக்கம்போல செல்லமுத்துவும் அவர் மனைவியும் விவசாய தோட்டத்திற்கு சென்று விட, வீட்டில் அக்கா தம்பி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில், காலை 9 மணியளவில் தந்தை செல்லமுத்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டிற்குள் மகள் செல்வநாயகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
அருகிலேயே மகன் செல்வக்குமார் கத்தியுடன் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லமுத்துவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு வந்த கீரனூர் போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய செல்வநாயகியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “செல்லமுத்துவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில், மகன் தனக்கு பிறக்கவில்லை எனக் கூறிவந்துள்ளார். மேலும் தனது சொத்துகள் அனைத்தையும் மகள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகளுக்கு திருமணம் முடிக்கவும் ஏற்பாடு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், அக்கா இருந்தால் தானே அனைத்து சொத்தும் அவருக்கு செல்லும்… இறந்துவிட்டால் தனக்கு கிடைத்துவிடும் என்ற நோக்கில் கழுத்தை அறுத்துள்ளார்.
தற்போது அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டதால் ஏடிஎஸ்பி லாவண்யா மேடம் ரத்த தானம் அளிக்க முன்வந்தார். ஆனால் அதற்கு முன்னதாக ரத்த வங்கியில் தேவையான ரத்தம் கிடைத்துவிட்டதால் அவர் திரும்பிவிட்டார். செல்வக்குமாரை கைதுசெய்துள்ளோம்” என்றனர்.
இதேபோல கடந்த வாரம் சனிக்கிழமை பழநியில் சொத்துத் தகராறு காரணமாக மகேந்திரன் என்ற விவசாயியை அவர் அண்ணன் அரிவாளால் வெட்டி கொலைசெய்தார். அன்றையை தினமே முருகபவனத்தைச் சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன்(20) என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டார். உறவினருக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக கொலைசெய்த அதேபகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(22) கைதுசெய்யப்பட்டார். கதிரையன்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமார்(22) முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அதேபகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தனராஜ், முருகானந்தம், ரகுபதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை திண்டுக்கல் 6, ஆத்தூர் 5, வேடசந்தூர் 4, நிலக்கோட்டை 3, பழநி 2, ஒட்டன்சத்திரம் 2, நத்தம் 2 என மாவட்டத்தில் மொத்தம் 24 கொலைகள் நடந்துள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் தொடரும் கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.