புதுடெல்லி: மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதி அளிக்கும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஒன்றிய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இன்டர்நெட், விளம்பர பேனர்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் நாள்தோறும் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றது. இது போன்ற விளம்பரங்களில் நடிப்பவர்களை பார்த்தும், மேலும் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் மற்றும் இத்தனை சதவீதம் தள்ளுபடி என்பதை கேட்டு முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகப்படியாக ஏமாந்து வருகின்றனர். இந்த நிலை நாடு முழுவதும் உள்ளது.இந்நிலையில், ஒன்றிய அரசு தரப்பில் ஒரு அதிரடி உத்தரவின் அடிப்படையில் சட்ட வரைவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், ‘நடிகர்கள் உட்பட விளம்பரத்தில் ஈடுபடும் அனைவரும் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் உண்மைத் தன்மை மற்றும் தகுதியை அறிந்து கொண்டு பின்னர் ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். மேலும், அவர்களுக்கான சம்பளம், லாபம், மேலும் அந்த தயாரிப்பில் நடிப்பவர்களின் பங்கு எவ்வளவு என்பதை ஒன்றிய அரசுக்கு கட்டாயம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் பொய்யான விளம்பரத்தில் ஈடுபட்டு புகார்கள் வரும் பட்சத்தில் குற்றவாளிகள் பட்டியலில் அதில் நடிப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள். முதலில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் முதல் அபராதமாக ரூ.10 லட்சம் விதிக்கப்படும். இதையடுத்து, இந்த எச்சரிக்கைக்கு பிறகு மீண்டும் அதுபோன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் ரூ.50லட்சம் அபராதம் விதிப்பதோடு அதுசார்ந்த நிறுவனம் செயல்பட மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும். இந்த சட்ட விதிகள் அனைத்தும் பொய்யான விளம்பரங்களில் ஈடுபடும் நடிகர்கள், விளப்பரம் கொடுப்பவர்கள், அதனை தயாரிப்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும் இதுபோன்ற சில வழிகாட்டுதல்கள் முன்னதாக ஒன்றிய அரசின் சட்ட விதிகளின் இருந்தாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. ஆனால் இந்த முறை மேற்கண்ட அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.