சென்னை: மக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வழங்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான தீர்ப்பின் சில அம்சங்கள் பொது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. வன விலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிகப்படுத்த வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பகுதிக்குள் உள்ள கட்டமைப்புகள் குறித்து மூன்று மாத காலத்திறகுள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், புதிதாக நிரந்தரமான கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் புதிதாக ஒரு கிலோ மீட்டர் விஸ்தரிக்கப்படுவதால் ஏற்கெனவே அங்கு வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை கூட விஸ்தரித்துக் கட்டிக் கொள்ள முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. பட்டா நிலமாக இருந்தாலும் புதிய கட்டுமானங்களுக்கு இந்த தீர்ப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட யானைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், வன விலங்கு சரணாலயத்திற்குட்பட்ட மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை புதிதாக விஸ்தரிப்பதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் ஏற்கனவே வசிக்கும் மக்களுக்கு விதிவிலக்கு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.