திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், `மத நம்பிக்கைகளில் திமுக அரசு தலையிடுவதில்லை’ என்றும், மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார் என்றும் எழுதப்பட்டுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில் `அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’ என்ற பெயரில் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. அதில் `சமீப காலங்களாக பெருமைமிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்த்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்’ என்று கடுமையாக சாடியுள்ளது.
அந்தக் கட்டுரையில், “இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்தில்தான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதினகுரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்துமனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதையொட்டி அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடைவிதித்ததார். இந்நிலையில் அதனையொட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், சில மதவெறி கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் பேசி, அவர்களை முதல்வருடன் சந்திக்க வைத்து சுமூக நிலையை உருவாக்கினார்.
இதையும் படிங்க… `சிதம்பரம் கோயிலில் விசாரணை… அக்கறையுள்ளோர் கருத்து தெரிவிக்கலாம்’- அறநிலையத்துறை தகவல்
சம்பந்தப்பட்ட தருமபுர ஆதினகர்த்தரும் அதற்கு நன்றி தெரிவித்தார். மற்ற ஆதினங்களும் இந்த முடிவை வரவேற்றனர். ஆனால் மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டி – அந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, திமுக ஆட்சி. தமிழக அரசும், முதலமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் தமிழகம் அமைதிப்பூங்காவாக அனைத்து மதத்தினரும் அண்ணன் – தம்பிகளாக ஒன்று இணைந்து வாழவேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதினகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில் தொடர்ந்து கிறுக்குத்தனமாகப் பேசி வருகிறார்.
`அமைச்சர்கள் வெளியே நடமாட முடியாது’ `அரசியல்வாதிகளுக்கு ஆதினத்தில் என்ன வேலை’ எனக்கூறி மிரட்டுகிறார். மேலும் அமித்ஷாவையும் மோடியையும் காட்டி பயமுருத்த நினைக்கிறார். மதுரை ஆதினம் இருப்பது தமிழ்நாடு. இந்த மண்ணில் பல சைவ ஆதினங்கள் உள்ளன. அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன. ஆனால் மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும். அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்.
இதையும் படிங்க… “நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்” காரணம் கூறும் மதுரை ஆதீனம்
காஞ்சி மடத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். ஜெயேந்திரரை சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம். இவையெல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக்கூடாது” என மிகக் கடுமையாக தாக்கியுள்ளது.
மேலும் “தமிழகத்தில் பொது அமைதிக்கு ஊறு தேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க இயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்பதை மதுரை ஆதினம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சில நிகழ்வுகளை நினைவுபடுத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் மதவெறிப் பேச்சுகள் பேசுவதை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM