பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின.
சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் (ஒருவர் வெற்றிபெற 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை) 2 வேட்பாளர்களின் வெற்றி உறுதியானது. அதேபோல காங்கிரஸுக்கு 77 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் ஒருவரின் வெற்றி உறுதியானது. இதனால் 4-வது இடத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை கடுமையாக போராடின.
இந்நிலையில், காங்கிரஸ் வெற்றிபெற உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மஜதவின் எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதினார். இதனால் ஒரு மஜத எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனையும் மீறி பாஜக வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லஹர் சிங் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
பசவராஜ் பொம்மைக்கு பாராட்டு
பாஜகவைச் சேர்ந்த 2 பேர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்றதால் முதல்வர் பசவராஜ் பொம்மை உற்சாகம் அடைந்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.
இந்நிலையில் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘கர்நாடகாவில் இருந்து 3 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால் பாஜக மூத்த தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெகுவாக பாராட்டினார்.
‘இந்த வெற்றிக்கு உங்களது விலை மதிப்பற்ற முயற்சியும் ஈடுபாடுமே காரணம். கர்நாடகா வழங்கிய மிகப்பெரிய பரிசாகும். கர்நாடகாவின் இந்த பங்களிப்பு மேலும் பல நற்பணிகளை மேற்கொள்ள உத்வேகம் அளிக்கும்’ என மனம் திறந்து பாராட்டினார்.
இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது கஷ்டம் என நினைத்தேன். அதனை சாத்தியப்படுத்திய உங்களுக்கும் கட்சியின் மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரித்திருக்கிறது’ என பாராட்டினார்.
நட்டா பாராட்டு
இதேபோல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் என்னை தொடர்புகொண்டு பாராட்டினார். தனிப்பட்ட முறையில் இந்த வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இதற்கு காரணமான அனைத்து மேலிடத் தலைவர்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் மாற்று கட்சியைச் சேர்ந்த நல்லெண்ணம் கொண்ட எம்எல்ஏக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.