வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்:ரஷ்யா – உக்ரைன் போரால், குஜராத்தில் வைர தொழில் பாதிக்கப்பட்டு, ௧௫ லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், வைரம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலும் குறிப்பிடும்படியாக இந்த தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு, வைரம் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகளுக்காக, ஆண்டுக்கு, 30ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புக்கு, பட்டை தீட்டப்படாத வைரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், 90 சதவீத வைரங்கள், ரஷ்யாவின் ‘அல்ரோசா’ நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது.
தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதை கண்டித்து, ரஷ்யா மீது
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. முதலில், கச்சா
எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட சில துறைகளில் மட்டும் இருந்த பொருளாதார தடை,
தற்போது பல்வேறு துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் அல்ரோசா வைர ஏற்றுமதி நிறுவனம் மீது, பொருளாதார தடைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
உலகில், பல நாடுகளுக்கு பட்டை தீட்டப்படாத வைரங்களை இந்நிறுவனம் அனுப்பி வந்த நிலையில், தற்போது ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் வைர தொழில் பாதிக்கப்படுவதுடன், பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் மட்டும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 15 லட்சம் தொழிலாளர்கள் வைரம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வைரத்தை இறக்குமதி செய்ய முடியாததால், இவர்களில்பலருக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.சில நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு, வாரம் இரண்டு நாள் விடுப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனால், ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவு பெற வேண்டும் என்றும், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், வைர தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement