வாஷிங்டன் : இந்திய எல்லையோரங்களில், சீனா ராணுவ பலத்தை அதிகரித்து, இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு துாண்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் பேசியதாவது:
இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா, சாலைகள், பாலங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும், இந்தியாவை போர் நிர்பந்தத்திற்கு சீனா துாண்டுகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உரிமையை பாதுகாக்க அமெரிக்கா துணை நிற்கும். தென் சீனக் கடலில் தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பங்கு உள்ளது. இதை மறுக்கும் சீனா, தென் சீனக் கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என கூறுகிறது.
அதுபோல கிழக்கு சீனக் கடல்பகுதியிலும், ஜப்பானுக்கு சொந்தமான பகுதியை தனக்கே சொந்தம் என்கிறது. இத்தகைய அசாதாரண சூழலை சமாளிக்க இந்தியா – அமெரிக்கா இடையே கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் கூட்டுப் பயிற்சி மிகவும் அவசியமாகியுள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் எத்தகைய ஆக்கிரமிப்புகளையும் முறியடிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பின் தலைவர்கள், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கும் நோக்கில் ஆசியன் மற்றும் பசிபிக் தீவு நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement