சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 33,174 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1.99 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என 24 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்ததுபோல, இந்த ஆண்டு ஜனவரி முதல் 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டும். பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பொட்டலத்தில் அடைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் சில கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் வரும் 13-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தன.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி, சில பணியாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. எனினும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள், தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல், தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள், தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைத்துள்ளன.