அகமதாபாத்: குஜராத்தில் பெற்ற மகளை விபசார தொழிலில் ஈடுபடுத்தி அவரை ரூ.12 லட்சத்திற்கு விற்க முயன்ற தாய் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த சபர்கந்தா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தாய் மற்றும் அவரது அத்தை ஆகியோர், மத்திய பிரதேசத்தில் உள்ள விபசார கும்பல் தலைவனிடம் ரூ. 12 லட்சத்திற்கு விற்க முயன்றனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாய், அத்தை உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சபர்கந்தா போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் தனது 16 வயது மகளையும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிகழ்வுகளில் 18 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட சிறுமி, அடுத்த சில மணி நேரங்களில் தனது புகாரை வாபஸ் பெற்றார். இருந்தும், அவரை அச்சுறுத்திய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வழக்கில் சிறுமியின் தாய், அத்தை உட்பட 20 பேர் மீது ஐபிசி-யின் 376, 506, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில், 18 ஆண்கள் என்பதால், அவர்களை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். தாய் உட்பட மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.