நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் உடல்களுக்கும், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ஏகே சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தாறுமாறாக வந்த லாரியும் மண்மேட்டில் மோதி நின்றதையடுத்து, இரு வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற சுற்றுலா வேன், எதிர்பாராத விதமாக போலீசார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், புதுச்சத்திரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் முதல்நிலைக் காவலர் தேவராஜன் ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ராசிபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரு காவலர்களின் உடல்களுக்கும் தமிழக அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவலர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு, பொதுநிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கவும், கருணை அடிப்படையில் ஒருவருக்கு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டார்.