திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, தோகைமலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த காரணாம்பட்டி, காவல்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ரங்கநாதரை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு கோயிலுக்கு வந்தனர்.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டுக்குப் பதிலாக, நேற்றுமுன்தினம் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஸ்ரங்கம் கோயிலுக்குப் புறப்பட்டனர். ஸ்ரங்கம் மேலூரில் உள்ள தோப்பில் அன்றைய தினம் இரவு தங்கினர்.
திருச்சி மாநகர மக்கள் வியப்பு
இன்று (ஜூன் 12) கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தி பின்பு ரங்கநாதரை தரிசிக்க உள்ளனர். அதன்பின், மாட்டு வண்டிகளில் நாளை ஊர் திரும்புகின்றனர். நேர்த்திக் கடன்செலுத்த 1,000-க்கும் மேற்பட்டவர்கள் மாட்டு வண்டிகளில் வந்ததை திருச்சி மாநகர மக்கள் வியப்புடன் பார்த்தனர்.