தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா, தனது வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பல முன்னணி பிரபலங்களுடன் பணிபுரிந்துள்ள பிரத்யுஷா, ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்திருக்கிறார். மேலும் பிரத்யுஷா, தான் வசித்துவந்த அதே பகுதியில் ஃபேஷன் ஸ்டுடியோவையும் நடத்திவந்துள்ளார். இந்த நிலையில் பிரத்யுஷா நேற்று திடீரென தனது வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார், பிரத்யுஷாவின் உடலை நேற்று மீட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பிரத்யுஷாவின் உடல் உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில், சந்தேக மரணம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் முக்கியமாக, பிரத்யுஷா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் கூறிய போலீஸார், பிரத்யுஷாவின் படுக்கையறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை கைப்பற்றியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.