திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் அமைந்நிருக்கும் தியாகராஜர் திருக்கோயில் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பக்திப் பரவசத்துடன் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். இவ்விழாவை முன்னிட்டு, திருக்காரவாசல் கிராமம் முழுவதும் களைகட்டியிருந்தது.
திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் அமைந்துள்ள ஆதிவிடங்க தியாகராஜர் திருக்கோயில் தமிழ்நாடளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 119-வது தலமாகப் போற்றப்படுகிறது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருக்கோயில், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பரிகார தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 2-்ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த ஜூன் 5-ம் தேதி, தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் இரவு நேரத்தில், பூத வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷபம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி விதி உலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை ஜூன் 11-ம் தேதி நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட தேரில் சுவாமி தியாகராஜர் எழுந்தருள மிகவும் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ‘ஆரூரா, தியாகேசா’ என பக்திப் பரவசத்துடன் முழக்கிய ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் உள்பட ஏராளமானோர், வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.
தேரோடும் நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து நிலையடியை வந்தடைந்தது. தியாகராஜர் சுவாமி தேருடன் அம்பாள் எழுந்தருளிய தேரும் வடம் பிடிக்கப்பட்டுத் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டித் திருக்காரவாசல் கிராமம் கோலாகலமாகக் காட்சி அளித்தது. தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், சிவராமன், கோயில் செயல் அலுவலர் சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டிக் காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.