இதற்கு முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இந்தப் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் Jurassic World Dominion படத்தின் ஒன்லைன்.
ஏங்க இதுக்குப் பேரு ஒன்லைனா என நீங்கள் கடுப்பாகலாம். ஆனால், இதுவே ஒன்லைனாக இருந்தால்கூட தேவலாம் என்கிற நிலையில்தான், ஜுராசிக் பார்க்கின் இந்த ஆறாம் பாகத்தை வேண்டா வெறுப்பாக எடுத்து வைத்திருக்கிறார்கள். சரி, அதைத்தாண்டி படத்தில் வரக்கூடிய சில ஆரம்பக் காட்சிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
சீன் 1
படத்தின் நாயகன் கிறிஸ் பிராட் 1000 கிலோவுக்கு மேல் இருக்கும் ஒரு டைனோசரைத் துரத்திக்கொண்டு செல்கிறார். அதன் மீது ஒரு கயிற்றினைத் தூக்கிப் போட்டு, லாகவமாக அதைப் பிடித்து நிறுத்துகிறார். நல்லவேளையாக ‘செண்பகமே… செண்பகமே’ எனப் பாட்டு பாடவில்லை.
சீன் 2
இஸ்லா நுப்லாரில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புக்குப் பின்னர், மிச்ச சொச்ச டைனோசர்களும் மனிதர்களும் ஒன்றாய் வாழப் பழகிவிடுகின்றனர். அப்படியானதொரு சூழலில் சில இடங்களில் டைனோசர்களை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சி, பிளாக் மார்க்கெட்டில் டைனோசர் கடத்தல் முதலிய விஷயங்கள் நடக்கின்றன.
சீன் 3
ராட்சத லோக்கஸ்ட்டுகளை வைத்து விவசாய நிலங்களில் அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள் சூரையாடப்படுகின்றன. ஆனால் அவை சாதாரண லோகஸ்ட்டுகள் அல்ல என்பதைக் கண்டறிகிறார் எல்லி சாட்லர். அவை டைனோசர்களின் மரபணுக்களினால் உருவாக்கப்பட்ட லோகஸ்ட்டு. (இந்தக் கதையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல)
இப்படியாக வரும் ஆரம்பக்கட்ட காட்சிகள் நமக்குs சொல்வது ஒன்றே ஒன்றுதான். முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்குச் சென்றால் பெல்ட்டை சற்று லூஸ் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பிப்போம் இல்லையோ, அப்படியாக இதற்கு மேலும் இதை பார்க்க ஆயுத்தமானால் மூளையைக் கொஞ்சம் கழற்றி வைத்துவிட வேண்டும் என்பதுதான். டைனோசர்களை வைத்து தீங்கு செய்யும் புது ஓனர், அதைக் கண்டுபிடித்து அந்த எண்ணத்தை அழிக்கும் ஹீரோக்கள் என்னும் பழைய பல்லவியை அடியொற்றித்தான் இந்தப் பாகமும் எடுக்கப்பட்டிருக்கிறது. நல்லதொரு இணைப்பாக இதில் டைனோசர் சர்க்கஸ் காட்சிகள் மிஷன் இம்பாஸிபிள், ஜேம்ஸ் பாண்டு ரக சண்டைக் காட்சிகளை கொஞ்சம் இணைத்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் மட்டும்தான் படத்தில் வரக்கூடிய சில புதிய காட்சிகளுள் ஒன்று.
இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா என்பது போல ஒரு காட்சி வருகிறது. கிறிஸ் பிராட்டின் வீட்டில் வளரும் சிறுமியையும், Velociraptor என்னும் டைனோசரின் குட்டியையும் சிலர் கடத்திக்கொண்டு சென்றுவிட, “உன் குழந்தையை எப்படியும் உன்னிடம் வந்து சேர்ப்பேன்” என டைனோசருக்கு வாக்கு கொடுக்கிறார் கிறிஸ். சொன்ன சொல் தவறாத கிறிஸ், இறுதியில் அதை நிறைவேற்றி வைக்க, தாயும் சேயும் ஜாலியாக காட்டுக்குள் ஓடுகிறார்கள். அந்தச் சூழலில் டைனோசருக்கு திருவள்ளுவர் எழுதிய ‘செய்ந்நன்றியறிதல்’ அதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது. மீண்டும் வந்து கிறிஸை ஒரு ஸ்நேகப் பார்வை பார்த்துவிட்டுச் செல்லும்.
கருணை என்ற ஒரு விஷயம் மருந்துக்குகூட இல்லாமல் ஒரு கதையை எழுதி நம் தலையில் கட்டியிருக்கிறார்கள். அப்படியெனில் படத்தில் நல்ல விஷயங்களே இல்லையா என்கிறீர்களா? பிரைஸ் டல்லாஸ் ஹோவார்டு ஒரு காட்சியில் தண்ணீருக்குள் பதுங்கிக்கொள்ள அவரைச் சரியாக தண்ணீருக்கு மேலிருந்தே ஒரு டைனோசர் கண்டுபிடித்துவிடும். விசுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவு என பல விஷயங்கள் சிறப்பாக இணைந்து எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி அது.
அதே போல் முந்தைய பாகங்களில் இருந்த ஹீரோக்கள் அனைவரையும் இதில் உள்நுழைத்திருக்கிறார்கள். அதனால் இயல்பாகவே ஒரு நாஸ்டால்ஜியா ஃபீலை கொண்டு வந்துவிடுகிறார்கள். அதே சமயம் எல்லோருமே ஹீரோக்கள் என்பதால் யாருக்கும் எதுவும் ஆகாது என்பதால் திரைக்கதை முழு யானையை விழுங்கிய டைனோசர் போல் படுத்துவிடுகிறது. ஜான் வில்லியம்ஸ் இசையமைத்த ஒரிஜினல் ஜுராசிக் வேர்ல்டின் இசை ஆங்காங்கே ஒலிக்க விடப்பட்டிருக்கிறது. ‘சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா’ என்பது மட்டும்தான் நம் மைண்டு வாய்ஸாக இருக்கிறது.
இதுதான் கடைசி பாகம் எனச் சொல்லப்பட்டாலும், நெட்பிளிக்ஸில் வெளியாகும் அனிமேஷன் தொடரான கேம்ப் கிரெடேஷியஸும் இதே யுனிவர்ஸுக்குள் நடப்பதால், இன்னும் சரியாக எது முடிவு எனச் சொல்ல மறுக்கிறார்கள்.
எது எப்படியோ டைனோசர்களுடன்கூட நா்ம வாழ்ந்துவிடலாம். ஆனால், இப்படியான படங்களுடன் வாழ முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறது இந்த `Jurassic World Dominion’.