சென்னை: கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனா தொற்று நிலவரம் குறித்து இன்று காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார். குறிப்பாக, தடுப்பூசி செயல்பாடுகள், கரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாக 6% நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.