குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட ஐந்து நாள்களில் விருந்து வைக்க வேண்டும் என அழைத்து புதுமண தம்பதியை பெண்ணின் அண்ணனே அரிவாளால் வெட்டி ஆணவக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் மகள் சரண்யா (24). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்துவந்தார். அதே போல, திருவண்ணாமலை மாவட்டம், பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலை பார்த்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர்களது காதலை சரண்யாவின் வீட்டார் ஏற்கவில்லை. மேலும், `நாம வேற சமூகம், அவங்க வேற சமூகம்!’ எனக் கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சரண்யாவின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு, அவரை திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதை அறிந்து சரண்யா, மோகன் இருவரும் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அத்துடன் தன் பெற்றோருக்கு போன் செய்த சரண்யா, மோகனை திருமணம் செய்துகொண்ட விவரத்தை கூறியுள்ளார்.
இதில் சரண்யா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததுடன் சரண்யாவைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யாவின் அண்ணன் அவருக்கு போன் செய்து, `உனக்கும், மாப்பிள்ளைக்கும் விருந்து வைக்க வேண்டும்’ எனப் பாசமாகப் பேசுவது போல் நடித்து ஊருக்கு அழைத்துள்ளார். இதை உண்மையென நம்பிய புதுமண தம்பதி சென்னையிலிருந்து கிளம்பி சோழபுரம் துலுக்கவேலி வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல் (31), அவரின் உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் இருவரும் சேர்ந்து வீட்டு வாசலிலேயே புதுமணத் தம்பதியை அரிவாளால் வெட்டினர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சோழபுரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சோழபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இவரின் உடல்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து சோழபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சக்திவேல், ரஞ்சித் இருவரையும் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பெற்றோரின் எதிர்ப்பை மீறி சரண்யா தான் காதலித்த இளைஞரைத் திருமணம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சமாதானம் பேசி விருந்துக்கு அழைப்பது போல அழைத்து, இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். கொலையாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள், அவர்களைத் தேடி வருகிறோம்.”