கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கருப்புக் கொடி போராட்டம் தீவிரம் காரணமாக, புகாருக்கு உள்ளான முதல்வர் பினராய் விஜயன் விருந்தினர் மாளிகையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் காரணமாக கண்ணூரில் உள்ள இல்லத்தில் முதல்வர் பினராய் விஜயன் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், இந்த கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதனை நீதிமன்றத்திலும் ரகசிய வாக்குமூலமாக தெரிவித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர்.
அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் சுத்துப்போட்டு கருப்பு கொடி காட்டி வருகின்றனர். வடகரையில் பினராய் விஜயன் கான்வாய் முன்பு கறுப்புக்கொடி காட்டியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.