வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிள் மக்கள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று திரளாக பேரணி சென்றனர்.
அமெரிக்காவின் உவேல்டா, டெக்சாஸ், நியூயார்க், பப்ஃபலோ ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொடர் வன்முறைகளை தடுக்க கடுமையான துப்பாக்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்ற கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசும்போது, “ பொறுத்தது போதும். நான் இன்று ஒரு மேயராகவும், தாயாகவும், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் சார்பாகவும் பேசுகிறேன். நமது குழந்தைகளை துப்பாக்கி வன்முறையிலிருந்து பாதுகாக்க வேண்டும். நாடாளுமன்றம் அதற்கான பணியை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் இப்பேரணியில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய துப்பாக்கி சட்டம் வேண்டும் என்று பேசினர்.
இந்த நிலையில் சிக்காகோவில் கடந்த வாரத்தில் மட்டும் துப்பாக்கி வன்முறைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.
அண்மையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், அமெரிக்க பிரபலங்கள் பலரும் அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.