'அரசியலில் நுழைந்தபிறகும் நான் ஏன் சினிமாவை விடவில்லை?' – கமல் ஓபன் டாக்

‘சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான்’ எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கமல் ரத்ததான குழு துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரத்ததானக் குழுவை துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், “சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான். ‘விக்ரம்’ படத்தின் வெற்றி எனக்கு இன்னொரு படிக்கட்டு. நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை. படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை.

மக்களாட்சியில் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அரசியல் என்பது ஓட்டு எண்ணிக்கை  மட்டும் அல்ல, ஏழையை பணக்காரராக மாற்றுவது மட்டும் அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் மாற்றுவது தான் அரசியல். எனக்கு வள்ளல் பட்டம் தேவை இல்லை. மனிதன் என்ற பெயர் போதும்.

நான் என் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை. சினிமா என் தொழில். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை. கமல் அரசியலுக்கு வந்து ஒப்பந்தத்தில் பணம் அடிக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடியும். என் அரசியல் பேச்சு காரமாக இருக்கும். அதன் மூலம் மட்டுமே என்னை மிரட்ட முடியும். அதையும் செய்திருக்கிறார்கள். உண்மையைப் பேசினால் அவர்களுக்கு கோபம் தான் வரும். அரசியல் வியாபாரம் இல்லை; ஆனால் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

image
பள்ளிகளில் கழிப்பறை செல்ல வேண்டுமென்றால் போக முடியாத நிலை இருக்கிறது. கழிப்பறைக்கு செல்ல முடியாத இடத்திற்கு ஏன் படிக்க அனுப்பி வைக்க வேண்டும்? வீட்டில் நல்லபடியாக இருக்கட்டும். நாம் போய் சொல்லி கொடுப்போம். இதுதான் எங்கள் அரசியல்.

காலை வாரி விடுவது அல்ல எங்கள் அரசியல். தடால் தடால் என்று பேசுவதை சினிமாவில் பேசிக்கொள்கிறேன். என்னைவிட சிறப்பாக அரசியலை அவர்களால் செய்யமுடியாது. என்னிடம் தொழில்நுட்பம் இருக்கிறது. அவர்களிடம் மேடை தான் இருக்கிறது.

எனக்குப் பிடித்த இரண்டு தலைவர்களுக்கு சினிமா பிடிக்காது. ஆனால் நான் ஏன் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை? தொலைக்காட்சியில் சின்னத்திரைக்கு ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். குடிசைக்குள் சென்றால்தான் கோபுரத்தில் வாழ முடியும். தொலைக்காட்சிக்கு சென்றது எனக்கு அடுத்த பலமாக தான் தெரிகிறது. என் தொழில் தொடரும்.

சினிமாவுக்கு நடிக்க ஏன் செல்கிறீர்கள்?என்று கேட்காதீர்கள். நான்  செலவு செய்யப் போகும் பணம் எல்லாம் வருமான வரித்துறைக்கு தெரியும். என் கட்சிக்கு கொடுக்கும் தொகை வருமான வரித்துறைக்கு தெரியும். பயந்து ஒடுங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் என்பது கடினமான வேலை. நற்பணி தான் எங்கள் அரசியல்” என்றார்.

இதையும் படிக்கலாம்: `என் மகனோடு லாக் அப் மரணங்கள் முடிவுக்கு வரட்டும்’ – விசாரணை கைதி ராஜசேகரின் தாய் பேட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.