தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராகுல் காந்தியை சட்டத்துக்குட்பட்டு அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் பயத்தின் காரணமாக தங்கள் மீது தவறே இல்லாதது போல நடந்து கொள்கின்றனர்.
காங்கிரஸ் தனிமனித குடும்பத்துக்காக இயங்கும் கட்சி. தவறு செய்திருப்பது நீதிமன்றம் வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
‘பொய்யான தகவல் சொல்பவர்கள் மீது வழக்கு போடுவோம்.’ என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அவர் வழக்குப் போடட்டும். அதற்குரிய ஆவணங்களை உரிய விசாரணை ஆணையத்திடம் சமர்பிக்க தயாராக உள்ளோம். தி.மு.க அமைச்சர்கள், ‘கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன், சுளுக்கு எடுப்பேன்’ என்றெல்லாம் பேசுகின்றனர்.
அடுப்புக்கரி, மேலே உள்ள சட்டியைப் பார்த்து நீ கருப்பு என்று சொல்லுமாம். செந்தில் பாலாஜி பா.ஜ.க தொண்டர்களைப் பார்த்து குண்டர்கள் என்பதுதான், 2022 ஆண்டின் சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.
51 அதிகாரிகளை மாற்றிவிட்டோம். யாருக்கும் எதுவும் தெரியாது என்பது, கல்யாண மாப்பிள்ளையின் சீப்பை மறைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என தப்பு கணக்குபோடுவது போல. ஊழல் செய்யாமல் வேலை செய்யுங்கள் என்று முதல்வர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதிகாரிகளை மாற்றுவதால் பலனில்லை.
தி.மு.க செய்யும் ஊழல் அப்பட்டமாக, எல்லோருக்கும் தெரியும்படியாக இருக்கிறது. இதை ஆவணமாக பொதுமக்களிடம் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடியோடி செய்தியாளர்களைச் சந்திப்பார். இப்போது சுகாதாரத்துறை செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
காவல்துறையினர் அரசியல் தலையீடு மற்றும் பணிச்சுமை காரணமாக தவறு செய்கின்றனர். ஆளுங்கட்சியின் தலையீட்டிலிருந்து காவல்துறையை காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்து 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. காவல்துறை பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது.
முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை மாநகராட்சி 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பழனிசாமி என்பவர், ‘அரசு எதையும் செய்வதில்லை நான் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
இதுதான் ஆளுங்கட்சியின் அவலநிலை. முதல்வரின் மகன், `எங்களை ஜெயிக்க வைத்தால் நான் பாய் தலையணை எடுத்து கோவையிலேயே தங்கிவிடுவேன்!’ என்றார். அந்த புண்ணியவான் எங்கே போனார் என்று தெரியவில்லை. கோவைக்குள் அவரை யாரும் பார்க்கவில்லை. கரூரில் இருந்து ஒரு அமைச்சர் தேர்தலின் போது எட்டிப்பார்த்தார்.
அவரையும் காணவில்லை. கருத்தியல் ரீதியாக பா.ஜ.க-தான் இங்கு எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. தி.மு.க சொல்கிற அனைத்து பொய்களையும் ஆதாரத்துடன் மக்களிடம் எடுத்து வைப்பது நாங்கள்தான். அதை வேறு எந்தக் கட்சியும் பேசுவதில்லை.
இன்னொரு கட்சியை அழித்துவிட்டுதான் வளரவேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. இயல்பிலேயே இங்கு நாங்கள் வளர்வதற்கான களம் சிறப்பாக உள்ளது. சிதம்பரத்தில் தீட்சிதர்களை மிரட்டக் கூடிய செயல் கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளை ஏவி, அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு வெட்கப்பட வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சினிமா டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி, ஷூட்டிங் போன்ற இடங்களில்தான் காண முடிகிறது. அது எல்லாம் முடிந்து நேரம் கிடைத்தால் பள்ளி பக்கம் போகிறார்.
ஒரு அமைச்சர் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு அன்பில் மகேஸ் உதாரணம். ஐ.பி.எல் போட்டிக்கு தமிழ் வர்ணணை மட்டும்தான் அன்பில் மகேஸ் செய்யாத ஒரே வேலை. அ.தி.மு.க எங்கள் கூட்டணியில் தொடர்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை தவிர எல்லோரும் எங்கள் பக்கம் வரவேண்டும்.
கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வின் மனது புண்படும்படி நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். அ.தி.மு.க–பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களுக்குள் எந்த கொடுக்கால் வாங்கலும் இல்லை” என்றார்.