சித்தூர்: ‘ஆந்திர மாநிலம் ரூ7.50 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மேலும், 3 ஆண்டுகளில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என்று சித்தூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டினார். சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அமர்நாத் விவசாயிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அமர்நாத் பேசியதாவது: மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு துரோகங்கள் மற்றும் மோசடிகள் செய்து வருகிறார். இந்தாண்டு டெல்டா விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. அவரது ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ530 குறைவாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 3 வருடத்தில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். முதல்வர் ஜெகன்மோகன் அனைத்து துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் செய்து வருகிறார். விவசாய துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறார். இனியாவது விவசாயிகள் விழித்துக் கொண்டு ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக போராட வேண்டும். முன்னாள் முதல்வர் சந்திரபாபு 5 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் செய்தார். தற்போதுள்ள முதல்வர் ஜெகன்மோகன் 3 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் செய்துள்ளார். மொத்தம் தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலம் கடனில் உள்ளது. வருகிற தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி வெற்றி பெற்றால் மாநிலத்தை பாலைவனம் ஆகிவிடுவார். இவ்வாறு, அவர் பேசினார்.