சென்னை ; ”இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபடியே உள்ளது” என மத்திய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.
சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் வி.நாராயணன் 16வது நினைவு சொற்பொழிவு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் பேசியதாவது:
சர்வதேச மின்சக்தி கூட்டணிக்கு தலைமை ஏற்று இந்தியா செயல்படுகிறது. யு.பி.ஐ. என்ற வங்கிகளுக்கான அடையாள எண் வழங்குவதிலும் வெற்றி அடைந்துள்ளோம். நிதிப்பற்றாக்குறை பொது செலவினங்களின் தரம் மானிய சீர்திருத்தம் போன்ற உள்நாட்டு சவால்களை சரிசெய்தல் அவசியம். நிதி பற்றாக்குறையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் பொது மக்களின் சேமிப்பு உயரும். ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதம் வரை பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் பல்வேறு நாடு களுக்கு முன்னோடியாக நாம் திகழ்வோம்.
எண்ணெய்க்காக ரஷ்யாவை நம்புவது குறைந்து வரும் காரணத்தால் பொருளாதார சரிவை எதிர் கொண்டாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபடியே உள்ளது.
நம் நாட்டு மக்களும் அனைத்து அமைப்புகளும் இணைந்து செயல்பட்டால் அமெரிக்காவின் வணிக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம்; ஜப்பானின் தரம் மற்றும் பணியிட நெறிமுறைகள்; ஜெர்மனியின் உற்பத்தி திறன் மற்றும் ஸ்காண்டிநேவியாவின் தரமான வாழ்க்கை ஆகியவற்றை நம் நாட்டிலும் கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என்.காமகோடி சாஸ்த்ரா பல்கலையின் துணை வேந்தர் எஸ்.வைத்யசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement