மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `இந்தியாமீது யாரேனும் தீய பார்வை வீச நினைத்தால்கூட, அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்!’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2020-ம் ஆண்டு மே 5-ம் தேதி, லடாக் பகுதியில் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் மோதல் வெடித்ததிலிருந்தே, எப்போதுவேண்டுமானாலும் இருநாடுகளுக்கிடையே மோதல் வெடிக்கலாம் என்ற சூழலே எல்லையில் நிலவிவருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான அரிந்தம் பாக்சிகூட அண்மையில், “சீன எல்லையில் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனில் இன்று நடைபெற்ற 28-வது சிவில் இராணுவ கூட்டுப் பயிற்சி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஒருபோதும் போரை விரும்பியதில்லை. யாருடைய நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக்கூட இந்தியா கைப்பற்றியதில்லை. அதேபோல எந்த நாட்டையும் இந்தியா தாக்கியதுமில்லை. ஆனால், வேறு யாரேனும் நம் மீது தீய பார்வை வீச நினைத்தால்கூட, அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தியா தற்போது தனது ஆயுதப் படைகளுக்கான உபகரணங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், நட்பு நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது” என்றார்.