வாஷிங்டன்,
உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இதை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதில் இருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது. 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது.
பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்துள்ளது. நாளை மறுதினம் முதல் இதனை நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 27 ஆண்டுகால பயன்பாடு முடிவுக்கு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.