அமெரிக்காவில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதிக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் 49 பேர்களை சுட்டுக்கொன்ற விவகாரத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த இளைஞரின் தந்தை விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பல்ஸ் இரவு விடுதியில் நுழைந்து கடந்த 2016 ஜூன் 12ம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தினார் 29 வயதான Oman Mateen.
அதுவரையான துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிகக் கொடூரமான தாக்குதல் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டிருந்தது.
சம்பவம் நடந்த விடுதியில் மூன்று மணி நேர முற்றுகைக்கு பின்னர் Oman Mateen பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், Oman Mateen குறித்த விடுதியில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதில் அவரது தந்தை விளக்கமளித்துள்ளார்.
அதில், இரு ஆண்கள் முத்தமிட்டுக் கொள்வதை நேரில் காண நேர்ந்ததே தமது மகனை குறித்த கொடுஞ்செயலுக்கு தூண்டியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mir Seddique Mateen தெரிவிக்கையில், நாங்கள் மியாமி நகரத்தில் கடற்கரை பகுதியில் இருந்தோம், மக்கள் அங்கே இசை வாசித்துக் கொண்டு விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஆண்கள் இருவர் ஒருவரையொருவர் முத்தமிடுவதை Oman Mateen பார்த்தார், அதுவும் தனது மனைவி மற்றும் குழந்தைக்கு முன்னால் நடந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, இதனால் அவர் மிகவும் கோபமடைந்தார் என குறிப்பிட்டுள்ளார் Mir Seddique Mateen.
ஆனால் உண்மையில் Oman Mateen ஒரு தன்பால் ஈர்ப்பாளர் எனவும், காவல்துறை பயிற்சி காலகட்டத்தில் தமது நண்பருடன் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான மதுபான விடுதிகளில் சென்று வந்துள்ளார் எனவும், 2006ல் தாம் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என பெற்றோரிடம் வெளிப்படையாக அறிவிக்கவும் முடிவு செய்திருந்ததாக அவரது நண்பர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி, துப்பாக்கிச் சூடு நடந்த பல்ஸ் இரவு விடுதியில் Oman Mateen பலமுறை சென்றுள்ளதாகவும் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் பக்கங்களிலும் Oman Mateen வாடிக்கையாளராக இருந்துள்ளார் என தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமது மகன் தன்பால் ஈர்ப்பாளர் இல்லை என அவரது தந்தை மறுப்பு தெரிவித்து புதிய விளக்கமும் அளித்துள்ளார்.
விரிவான பொலிஸ் விசாரணையில் Oman Mateen ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என நிரூபிக்கப்பட்டாலும், அமெரிக்க ஊடகங்களில் அவை மறைக்கப்பட்டுள்ளன.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவை பழிவாங்க இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, ஐ.எஸ் ஆதரவாளர் என்பதையும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தொடர்புகொண்ட அதிகாரிகளிடம் Oman Mateen தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.