அசாமில் உள்ள பார்பெட்டா அரசு மருத்துவமனையில், 2019 மே 3-ம் தேதியன்று நஸ்மா கானம் என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பராமரிப்பு அறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து நஸ்மாவின் குடும்பத்தினரிடம், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி தரப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக பிறந்த குழந்தை, திடீரென எப்படி இறக்கும் என அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மூன்று நாள்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அச்சமயத்தில் பிரசவித்த தாய்மார்களின் பதிவை பார்த்தனர்.
அதில் நஸ்மா கானம் மற்றும் நஸ்மா காதுன் என்ற ஒரே பேரில் உள்ள இரண்டு பேர் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். அதில் ஒரு குழந்தை இறந்துள்ளது. ஒரே பெயர் உள்ளதால் காதுனின் குழந்தையை கானமுக்கு மாற்றி அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இது குறித்து பார்பெட்டா காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றது. நீதிமன்ற உத்தரவின்படி, அக்டோபர் 8, 2020 அன்று டி. என். ஏ பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் நஸ்மா கானம் தான் குழந்தையின் உண்மையான தாய் எனக் கூறி குழந்தை இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு தவற்றால் மூன்று வருட போராட்டங்களுக்கு பின்பு தன்னுடைய குழந்தையுடன் இணைந்துள்ளார் கானம்.