அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தும்போது சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போர் பலரின் வாழ்வை அழித்துவிட்டது
இதேவேளை, உக்ரைனில் நடக்கும் போர் தொடர்ந்து பலரின் வாழ்க்கையை அழித்து, அழிவையும் ஏற்படுத்துகிறது என்று ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட கொடூரங்கள், வரவிருக்கும் தலைமுறைகள் உட்பட, அவர்களுக்கு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்” என்றும் மிச்செல் பச்லெட் பச்லெட் கூறினார்.
உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகள் பிராந்தியம் முழுவதும் மற்றும் உலகளவில் பரவியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.