மத்தியப் பிரதேசத்தில் உறவுக்கார பெண் அகால மரணமடைந்த வேதனையில், அப்பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள மஜ்கவான் கிராமத்தில் ஜோதி தாகா என்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் ஜூன் 11 அன்று நடைபெற்றது. இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு எரியூட்டிய பின், உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது அவரது உறவுக்காரரான கரன் என்ற 21 வயது இளைஞர் இடுகாடு நோக்கிச் சென்றுள்ளார். கண்ணீருடன் இடுகாடு சென்றடைந்த அவர் எரிந்து கொண்டிருந்த ஜோதியின் சிதை முன் விழுந்து வணங்கியதை அங்கிருந்த சிலர் பார்த்துள்ளனர். திடீரென எரியும் சிதைக்குள் அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இளைஞரின் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு, சிதையில் இருந்து இளைஞரை வெளியே இழுத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த இளைஞரை மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இரு இளம் வாரிசுகளை அடுத்தடுத்து இழந்த அந்த குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
நேற்று காலை, அந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் ஜோதி தாகாவை எரியூட்டிய இடத்திற்கு அருகே செய்யப்பட்டது. இந்நிலையில் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பஹேரியா போலீஸ் நிலைய பொறுப்பாளர் திவ்ய பிரகாஷ் திரிபாதி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM