எல்ஐசி நிறுவன பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலை, அதன் பங்கு வெளியீட்டின் போது ரூ. 949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மாத காலத்தில் அதன் பங்கு விலை, நாள் தோறும் குறைந்து, சென்ற வார இறுதியில் ரூ. 710 என்ற நிலையில் இறங்கி வர்த்தகமானது. ஒரு மாதத்தில், 25% நஷ்டத்தை, இந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அடைந்துள்ளனர். இன்று ஜூன் 13 –ம் தேதி, எல்ஐசி பங்கு விலை சுமார் 3% இறங்கி ரூ.681-க்கு வந்தது.
எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது ரூ. 6.02 லட்சம் கோடியாக இருந்தது. தொடர் சரிவு காரணமாக அதன் மதிப்பு ரூ. 1.40 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. என்றாலும் சந்தை மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனம், தற்போது நாட்டின் ஏழாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. ஒரு மாத காலத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை அந்த நிறுவனம் இழந்திருப்பது மிகவும் கவலை கொள்ளும் விஷயமாக இருக்கிறது. சந்தை மதிப்பில் ஒன்றரை லட்சம் கோடி இழப்பு என்பது, டாடா மோட்டார்ஸ், ஹின்டால்க்கோ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் மொத்த மதிப்பை விட அதிகமாகும்
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை ( Department of Investment and Public Asset Management -DIPAM) செயலாளர், எல்ஐசி நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி தற்காலிகமானது என்றும் விரைவில் இந்த நிலை மாறும்; முதலீட்டாளர்களின் மதிப்பை உயர்த்தும் முயற்சியில், எல்ஐசி நிர்வாகம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். பங்குச் சந்தை தொடர் சரிவும், எல்ஐசி பங்கு விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நிறுவனம், முதலில் மார்ச் மாதத்தில் பங்கு மூலதன வெளியீட்டை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக, இரண்டு மாத தாமதத்திற்கு பிறகு இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பங்கு விலையிலும் 40% வரை குறைத்தது. ஏற்கனவே திட்டமிட்டது போல், மார்ச் மாதம் அதிக விலைப்பட்டியலில் பட்டியலிடப்பட்டு இருந்தால், முதலீட்டாளர்களின் நஷ்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பங்குசந்தை தற்போது பங்குச்சந்தை வலுவான கரடியின் பிடியில் உள்ளது. இதுவும் எல்ஐசி நிறுவன பங்கு விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில், ஆங்கர் முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்டுகள், பெரிய நிதி நிறுவனங்கள் போன்றவை, இந்த வகை முதலீட்டாளர்களின் கீழ் வருவார்கள். இந்த வகை முதலீட்டாளர்கள் புதிய வெளியீடு வெளியிடப்பட்ட ஒரு மாத காலம் வரை, தமது பங்குகளை விற்க முடியாது. அந்த ஒருமாத கெடு, இன்றுடன் (ஜூன் 13) முடிவடைகிறது. 28 சதவீத வீழ்ச்சியுடன் தற்போது வர்த்தகமாகம் எல்ஐசி நிறுவனப் பங்குகளை, இந்த தடை காலம் முடிவுற்ற பிறகு ஆங்கர் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கும்பட்சத்தில் மேலும் இந்த நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைய, அதிக வாய்ப்பு உள்ளது.
எல்ஐசி நிறுவன பங்குகளை வாங்குவதற்காக பல புதிய முதலீட்டாளர்கள், டீமேட் கணக்குகளை ஆரம்பித்து புதிதாக தமது முதலீட்டை மேற்கொண்டனர். அவர்களுக்கு தற்போது எல்ஐசி கசப்பான அனுபவத்தை தந்திருக்கிறது. பங்குச்சந்தை என்றால் ஆபத்தானது என்றும், சூதாட்டம் போன்றது என்றும் இன்னும் நமது நாட்டில் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த உலக நாடுகளை ஒப்பிட்டால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பங்குச் சந்தையில் கணிசமாக புதியவர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில், இந்த வீழ்ச்சி ஒட்டுமொத்தமாக பங்குச் சந்தைக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது மிகவும் சாதாரணமானது. கடந்த 30 ஆண்டுகளில் பங்குச் சந்தை இதுபோன்ற பல்வேறு இறக்கங்களை சந்தித்து உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த இறக்கத்தில் இருந்து மீண்டு புதிய உச்சத்தை அடைவது பங்குசந்தையின் இயல்பு ஆகும். சந்தை சரியும் போது நஷ்டம் காரணமாக பங்குகளை விற்று வெளியேறுவது சரியான போக்கு அல்ல. இதுபோன்ற பங்குச் சந்தை இறக்க காலங்களில் அதிக முதலீடு செய்பவர்கள் ஏற்றத்தின் போது நல்ல லாபத்தை பார்ப்பார்கள். நமது இந்திய நாட்டின் வளர்ச்சி, நீண்ட காலத்தில் உலக நாடுகளோடு ஒப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும் என்று பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் எஸ்ஐபி முறையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து முதலீடு செய்வது தற்போது பெற்றுள்ள நஷ்டத்தை காலப்போக்கில் குறைக்கும்.