மும்பை: 2023 முதல் 2027-ம் ஐபிஎல் தொடர்களுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது. 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஏலம் இன்று முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியாவில் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் இந்தியாவை தவிர மற்ற பகுதிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் என ஏலம் நடத்தப்பட்டது.இதில் டிஸ்னி-ஹாட் ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், சூப்பர்ஸ் போர்ட், டைம்ஸ் இன்டர்நெட், 18 உள்பட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இறுதியில் மொத்தம் 410 போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ரூ. 23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ரூ. 20,500 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2017-ம் ஆண்டில் ஸ்டார் குழுமம் 2018-2022 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த வகையில் ஒரு போட்டிக்கு ரூ.54.5 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு ஒளிபரப்பு ஏலத்தின் மூலம் ஒவ்வொரு போட்டிக்கும் ஐபிஎல் பிசிசிஐ-க்கு ரூ.107.5 கோடி கிடைக்க உள்ளது.