டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்றபோது, காவலர்கள் மோதியதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மத்திய அரசை கண்டித்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயகுநரகம் அலுவலகத்தில் விசாரனைக்கு ஆஜரானார்.
முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. அதன்படி, 24 அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காலை 9 மணியளவில் கட்சியின் ஒட்டுமொத்த மூத்த தலைவர்களும் ஒன்றுகூடினர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரமும் கலந்துகொண்டார்.
அமலாக்கத்துறை தலைமையகத்திற்கு அணிவகுப்பு நடத்த காங்கிரஸுக்கு அனுமதி மறுத்த காவல்துறை, கட்சி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பெருமளவில் பேரிகார்டு மூலம் தடைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ப. சிதம்பம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “மூன்று பெரிய, முரட்டுத்தனமான போலீஸ்காரர்கள் உங்கள் மீது மோதியதில் ஒரு மயிரிழை அளவு எலும்பு முறிவுடன் நீங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளீர்கள் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மயிரிழை அளவு முறிவாக இருப்பதால் அது 10 நாட்களில் தானாகவே குணமாகும். நான் நலமாக இருக்கிறேன், நாளை என் வேலையைப் பார்க்கப் போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பேரணியில் போலீசார் மோதியதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் விலா எலும்பில் மயிரிழை அளவு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“