சென்னை: பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் மற்றும் கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த மே 29-ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பூந்தமல்லி நீதிமன்றம் ஏற்கெனவே கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது .இதையடுத்து, அந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் துறை சார்பில் வழக்கறிஞர் கோகுல், கார்த்திக் கோபிநாத் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.