சென்னை: சென்னை, கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உட்பட 5 காவலர்களும் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகினர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் லட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை செங்குன்றம், அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை, திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘ராஜசேகர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. சோழவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
திருட்டு வழக்கு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தபோது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்’ என்றனர்.
ஆனால், ராஜசேகரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்று விட்டதாகவும், தொடர்புடைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில், போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 போலீஸார் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைதி இறந்தது குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் எஸ்.ஐ. உள்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் கெல்லீஸ் 12வது சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தலைவர்கள் கண்டனம்: திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது இது போன்ற தொடர் லாக் அப் மரணங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று மக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய இந்த மரணம்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.