சீதாமர்ஹி: விசா இல்லாமல் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சீனாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பீகாரில் இந்திய-நேபாள எல்லைப்பகுதியை நடைபயணமாக கடக்க முயன்ற இரண்டு பேரை சாஸ்திர சீமா பால் வீரர்கள் மடக்கி விசாரணை செய்தனர். இதில் இருவரும் சீனாவை சேர்ந்த லாங்(28) மற்றும் யுவான் ஹைலாங்(34) என்பது தெரியவந்தது. இருவரும் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளனர். இவர்கள் இருவரும் டெல்லி என்சிஆர் பகுதியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்துள்ளனர். பின்னர் பீகார் வந்த இருவரும் அங்கிருந்து நடைபயணமாக மீண்டும் இந்திய எல்லையை கடக்க முயன்றபோது சிக்கியுள்ளனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் விசா இல்லை என்பது தெரியவந்தது. இருவரும் வாகனம் ஒன்றில் இலவசமாக பயணம் செய்து பீகாரை வந்தடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த வீரர்கள் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்த செல்போனில் இருந்த பதிவுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.