இடாநகர்: மிக நீண்ட காலமாக அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்த மாநில எல்லையில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலின் தகலா எல்லைப் பகுதியில், ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படையைச் சேர்ந்த பிரகாஷ் சிங் ராணா, ஹரேந்திர நெகி ஆகிய 2 வீரர்களை கடந்த மே 28-ம் தேதி முதல் காணவில்லை.
பிரகாஷ் சிங் ராணா உத்தராகண்டின் ருத்ரபிரயாக் நகரைச்சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி அனுஜ் (10) அனாமிகா (7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி மம்தா கூறும்போது, ‘‘விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பிரகாஷ் சிங் ராணா கடந்த ஜனவரி 23-ம் தேதி பணியில் சேர்ந்தார். கடந்த மே 27-ம் தேதி அவரோடு வீடியோ காலில் பேசினேன். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
காணாமல் போன மற்றொருவீரர் ஹரேந்திர நெகியும் உத்தரா கண்டை சேர்ந்தவர். அவரது மனைவி பூனம் கூறும்போது, ‘‘எங்களுக்கு ஒரு வயதில்குழந்தை இருக்கிறது. எனது கணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்’’ என்றார்.
இதற்கிடையில், இந்தியவீரர்கள் யாரையும் சிறைபிடிக்கவில்லை என்று சீன ராணுவம் தெரிவித்திருக்கிறது. எனவே இருவீரர்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.