சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்குப் பல ஆயிரக்கணக்கில் கால்நடைகள் ஏற்றுமதி வியாபாரம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சுமார் 15,000 ஆடுகளை ஏற்றிக்கொண்டு `பத்ர் 1′ என்ற கப்பல் புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சூடானின் செங்கடல் துறைமுகமான சுவாக்கினில் அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டு கப்பல் முழ்கியது. அந்த கப்பலிலிருந்த அனைத்து பணியாளர்களும் உயிர்பிழைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் விற்பனைக்காக ஏற்றிச்செல்லப்பட்ட 15,000 ஆடுகள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூத்த சூடான் துறைமுக அதிகாரி ஒருவர், “கப்பலில் 9,000 ஆடுகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். ஆனால் இந்தக் கப்பல் 15,800 ஆடுகளைச் சுமந்து சென்றிருக்கிறது. அனைத்து பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், மூழ்கிவிட்ட கப்பல் துறைமுகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். விபத்தின் காரணமாக ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கலும், கடலில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் இறந்து விட்டதால் இது சுற்றுச்சூழலில் தாக்கத்தையும் ஏற்படுத்தும்” என ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாகத் தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான ஒமர் அல்-கலீஃபா, “கப்பல் மூழ்குவதற்குப் பல மணிநேரம் எடுத்தது. பயணிகள் அனைவரும் ஒரு சாளரம் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அதே போலக் கால்நடைகளும் காப்பாற்றப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். கால்நடை உரிமையாளர்கள் சுமார் 700 ஆடுகளை மட்டுமே உயிருடன் மீட்டிருக்கின்றனர்.