மதுரை: தென்மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க தீவிரம் காட்டிவரும் காவல்துறையினர், போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்களை முடக்கி அதிரடி காட்டி வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவந்தது கவலை அளித்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கேற்ப, சில இடங்களில் கல்லூரி விடுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது சூழலின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்தது.
இதுபோன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களால் பல்வேறு இடங்களில் அடிதடி போன்ற குற்றச் செயல்களும் அதிகரிக்க தொடங்கியதால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க, தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க, காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடக்க காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்னர். “கஞ்சா விற்பனை தடுப்பில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தென் மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்களுக்கு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், தென்மண்டலத்தில் இதுவரை கஞ்சா வழக்கில் சிக்கிய சுமார் 90க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்குகளில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 3 சக்கர வாகனங்களும், சேடப்பட்டி காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்குகளில் ரூ. 59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்குகளில் ரூ.1.8 கோடி மதிப்பு அசையா சொத்துக்களும், தேனி மாவட்டம், மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டி காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் ரூ. 23 லட்சம் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர், அவர்களின் உறவினர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, இதுவரை மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கையால் தென்மாவட்டத்தில் கஞ்சா விற்பனை சற்று குறைத்து இருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தென் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கண்ணப்பன் போன்ற காவல்துறை அதிகாரிகளும் கஞ்சா ஒழிப்பில் தென்மாவட்ட போலீஸாரின் நடவடிக்கையை பாராட்டியுள்ளதுடன், தமிழகம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கை தொடரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை தொடர்பாக, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அளித்த பேட்டியில், ”கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்தால் இளைய சமுதாயத்தின் வாழ்க்கை சீரழிந்துவிடும். தென் மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்களை பழாக்கும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டியுள்ளோம். ஆந்திரா, கேரளா போன்ற பகுதியில் இருந்து கஞ்சா வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தேனி, திண்டுக்கல் போன்ற மலையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மீது வழக்கு பாய்வதோடு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. சில்லறை விற்பனை ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. தொடர் நடவடிக்கைக்களால் தற்போது தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையும், கடத்தலும் குறைய தொடங்யுள்ளது” என்று அவர் கூறினார்.