ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமாக இருந்துவருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நேற்றைய தினம்) ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த ஆண்டு இதுவரை வெவ்வேறு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரால் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் பள்ளத்தாக்குகள் முழுவதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத சம்பவங்களும், பண்டிட்டுகளுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்திருப்பதால், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 158 பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். தற்போது 83 லஷ்கர் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கின்றனர். இது தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 30 ஜெய்ஷ் பயங்கரவாதிகளும், 38 ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளும் இருக்கின்றனர். கடந்த சில நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உளவு அமைப்புகளின் தரவுகளின்படி, பாகிஸ்தான் ராணுவம் 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் செயல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.