தற்போது உள்ள இந்திய அரசியல் நிலைப்பாட்டை நகைச்சுவையாக கூறுவதாக நினைத்து, ஜஸ்டின் பீபரின் உடல்நலக் குறைபாட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் இந்திய ஸ்டாண்ட் -அப் காமெடியனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கனடாவை சேர்ந்த 28 வயதான புகழ்பெற்ற பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், தனக்கு ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம் என்ற ஒருவகை குறைபாடு உறுதிசெய்யப்பட்டிருப்பாகவும், அதனால் முகப்பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் அவரது முகத்தின் ஒரு பக்கத்தை அசைக்க முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இது இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் அவரின் நோயை இந்திய அரசியலுடன் ஒப்பிட்டு, ஸ்டாண்ட் -அப் காமெடியன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ராப்பருமான முனாவர் ஃபரூக்கி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜஸ்டின் பீபரின் நோயை குறிப்பிட்டு, “அன்புள்ள ஜஸ்டின் பீபர், என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே இந்தியாவில் கூட வலது பக்கம் சரியாக வேலை செய்யவில்லை” என்று பதிவிட்டார். இதையடுத்து ஜஸ்டின் பீபரின் நோய் குறைபாட்டை கேலி செய்வதாகக் கூறி, முனாவர் ஃபரூக்கியை சமூகவலைத்தளப் பக்கங்களில் நெட்டிசன்கள் கோபமாக திட்டி தீர்த்துள்ளனர்.
ஒருவரின் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை, நகைச்சுவைக்காக பயன்படுத்தியது தவறு என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளார். ஒருவரின் நோயைப் பற்றி கேலி செய்துள்ளதைப் பார்க்கும்போது, நீங்கள் எவ்வளவு கேவலாமாக ஆக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். மேலும் இதில் என்ன வேடிக்கை இருக்கிறது, யாரோ ஒருவரின் நோயைப் பற்றி கேலி செய்வது வேடிக்கையானது என்று நினைக்கிறீர்களா? என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பொதுவாக முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற தனது நிகழ்ச்சி ஒன்றில் “இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் அவமதித்ததாக” குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தவர் தான் முனாவர் ஃபரூக். இதனால் அவரின் பல நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், அறிக்கை ஒன்றில், இதுவரை தான் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியிருந்தார். மேலும் வெறுப்பு வென்றது, கலைஞர் தோற்றுவிட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான லாக்கப் முதல் சீசனில் பங்குபெற்று, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் முனாவர் ஃபரூக்கி என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM