பீஜிங் : சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா மீண்டும் பரவி வருவதை அடுத்து, மதுபான விடுதியுடன் தொடர்புள்ள, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.நம் அண்டை நாடான சீனாவில், தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, இரு வாரங்களுக்கு முன் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதையடுத்து வழக்கம் போல அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வாரம் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு பீஜிங்கில் உள்ள ‘ஹெவன் சூப்பர் மார்க்கெட் பார்’ என்ற மதுவிடுதி தான் முக்கிய காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.இங்கு குறைவான விலைக்கு மது வகைகள் விற்பனை செய்யப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். இதையடுத்து மதுபான விடுதிக்கு வந்தோரின் விபரங்களை அரசு அதிகாரிகளும், போலீசாரும் சேகரித்து வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி மதுபான விடுதிக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் உட்பட, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதற்கிடையே பீஜிங்கில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று பல பள்ளிகள் திறக்கப்படவில்லை.
அழகு நிலையம் ஒன்றில் இருந்து கொரோனா பரவியதாக கூறப்படும் சோயங் மாவட்டத்தில், மூன்று நாட்கள் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அழகு நிலையம், ‘மசாஜ் பார்லர்’ உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுஉள்ளன.
Advertisement