தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ஷாலினி. இவர் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
ஷாலினி தொடர்ந்த வழக்கில், “அவர் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர் என்றும், அங்கே 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர், 11 மற்றும் 12ம் வகுப்பு தனது ஊரில் இல்லாததால் அருகில் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காகக் கடந்த 2021ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதியதாகவும், அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் . இதனால், தமிழக அரசின் இந்த சட்டத்திருத்தம் தனது அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக குறிப்பிட்டுள்ள ஷாலினி, புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் இந்த சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி ராஜா மற்றும் கே. குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பணிக்குத் தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும். அப்போதுதான், பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே, இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்திற்கு எதிராக ஷாலினி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“