பெங்களூரு: மறைந்த தாதாவிடம் அடியாளாக இருந்த நடிகை அனுஷ்காவின் சகோதரருக்கு கொலை மிரட்டல் வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பாகுபலி, அருந்ததி, லிங்கா, என்னை அறிந்தால், வேட்டைக்காரன் உள்பட பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி, ஜெயகர்நாடக ஜனபர வேதிகே அமைப்பினை நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர் சார்பில் குணரஞ்சன் ஷெட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர். அதில், ‘குணரஞ்சன் ஷெட்டியின் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறிய மன்வித் ராய் மற்றும் ராகேஷ் மல்லி ஆகியோரால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, கொலை மிரட்டல் விடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர்.முன்னதாக மறைந்த பிரபல தாதா முத்தப்பா ராயின் கையாட்களாக குணரஞ்சன் ஷெட்டி, மன்வித் ராய், ராகேஷ் மல்லி ஆகியோர் இருந்தனர். முத்தப்பா ராய் இறந்த பின்னர், மூவரும் பிரிந்தனர். இந்த நிலையில் முத்தப்பா ராயின் உறவினரான மன்வித் ராய், ராகேஷ் மல்லி மற்றும் குணரஞ்சன் ஷெட்டிக்கும் இடையே பகை அதிகரித்துள்ளது. அதனால், குணரஞ்சன் ஷெட்டியை தீர்த்துக் கட்ட மன்வித் ராய், ராகேஷ் மல்லி ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து, குணரஞ்சன் ஷெட்டி தரப்பில் உள்துறை அமைச்சரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது மன்வித் ராய் வெளிநாட்டில் உள்ளார். மற்றொருவரான ராகேஷ் மல்லியிடம் கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.