EPS photos removed from Thiruvannamalai Taluk office issue: திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அ.தி.மு.க.,வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் அங்கு மீண்டும் வைக்கப்பட்டன.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இன்று தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தாசில்தார் அறையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வரிசையில் இருந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு காணப்பட்டன.
இதையும் படியுங்கள்: சென்னையில் விசாரணைக் கைதி மரணம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
இது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த தகவலை அறிந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அ.தி.மு.க.,வினர் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.
அப்போது அங்கு ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்று வந்தது. இதற்கிடையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிச்சாமியின் புகைப்படங்களை அகற்றப்பட்ட தகவல் பரவியதை அறிந்த வருவாய் துறையினர் மீண்டும் தாசில்தார் அறையில் அந்த புகைப்படங்களை அங்கு வைக்க நடவடிக்கை எடுத்தனர். முதலில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்தனர்.
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
மேலும் ஜமாபந்தி விழா நிறைவடைந்த பின்னர் தாசில்தார் அறைக்கு வந்த கலெக்டரிடம் அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை மாட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உடனடியாக புகைப்படங்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் அ.தி.மு.க.,வினர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் வைக்கும் வரை அங்கு இருந்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.